பன்னிரு திருமுறை

பன்னிரு திருமுறை

'தோடுடைய செவியன் பதிகத்திலிருந்து தொடங்கி, தோடு, கூற்று, பித்தா, வேயுறு தோளிபங்கன் என்று
பல பதிகங்களைப் பல நாள் பாராயணம் செய்தும் எந்தப்பயனும் கிடைக்கவில்லை. இது ஒரு பயனற்ற செயலோ?' என்று பல நண்பர்கள் என்னை வினவினார்கள். 'என்னுடைய அனுபவம் எப்படி இருக்கிறது' என்று கேட்டார்கள். அவர்களுக்குச் சொன்ன பதிலை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் அந்நாள் கௌமார மகா சன்னிதானம் சுந்தர சுவாமிகள் அடியேனை திருப்பெருந்துறை குடமுழுக்கு விழாவிற்கு அழைத்துக்கொண்டு சென்று இரண்டு நாட்கள் அவரோடு இருக்கச்செய்து அன்றைய நாள் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் செய்தார்கள். 'நமச்சிவாய வாழ்க' என்று நான் அன்றுதான் சொன்னேன். 'திருச்சிற்றம்பலம்' என்ற சொல்லை என்னுடைய 33 வயதில் அன்றுதான் உச்சரித்தேன். 'பாலனாய்க் கழிந்தநாளும்' என்ற அப்பர் சுவாமிகள் பதிகத்துக்கு ஏற்ப இவ்வளவு ஆண்டுகள் போய்விட்டனவே என்று கவலையுற்று என் துணைவியாருடன் கோவில் மகாமண்டபத்திலேயே தூங்கிவிட்டேன். அன்று இரவு எனக்கு இறைவன் உறக்கத்திலேயே தீட்சை கொடுத்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. ஆனால் அதை அவர் உணர்த்தவில்லை. என்னால் இன்றுவரை அதை உறுதி செய்யவும் முடியவில்லை.
இளம் வயதிலிருந்தே சுவாமி கும்பிடும் வழக்கங்களெல்லாம் இருந்தன. ஆனால் அடியேனை ஆழ்ந்த சைவனாக்கியது அந்த இரவுதான். அதற்குப்பின் ஏராளமான சாத்திர, தோத்திர, புராண, இதிகாச நூல்களைப் படித்துணரும் வாய்ப்பை இறைவன் வழங்கினான். இன்றும் தினமும் ஒன்று இரண்டு மணி நேரங்களைத் திருமுறைகளுக்காக ஒதுக்குகிறேன். இதைச் சற்றுக் கூட்டிக்கொடுக்கும்படி அவரிடம் கேட்டுள்ளேன்.
விரைவில் திருவருள் கூடும்.
சைவ சித்தாந்த சாத்திர நுட்பங்களின்படி நாமெல்லாம் உயிர்கள். என்றும் உள்ளவர்கள். உடலாகிய சட்டை, காலம் முடிந்தவுடன் அழிந்துவிடும். வாழ்வாவது மாயம். இது மண்ணாவது திண்ணம் என்ற ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் வாக்குப்படி இந்த உயிர் மறுபடியும் மறுபடியும் பிறப்பெடுத்துக் கொண்டே இருக்கும். கடற்கரை மணலின் துகள்களைக்கூட எண்ணிவிடலாம். ஆனால் நமது பிறவிகளை எண்ணவே முடியாது. 'நூறுகோடி பிரமர்கள் நொந்தினார். ஆறுகோடி நாராயணர் அங்ஙனே ஏறுகங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறுஇல்லாதவன் ஈசன் ஒருவனே' என்பது அப்பர் வாக்கு.
ஒவ்வொரு உயிருக்கும் ஒரு குறுந்தகடு உண்டு. கயிலாய மலையில் மிகப்பெரிய கணினி உள்ளது. அந்தக் குறுந்தகட்டில் ஒவ்வொரு உயிரின் நற்செயல்கள் வரவாகவும், தீச்செயல்கள் செலவாகவும் பதியப்படும். ஒவ்வொரு பிறவி முடிந்ததும் அந்தக் குறுந்தகடு நன்மை செய்திருந்தால் அதிக நன்மை தரும் சுக்கிரன், குரு போன்ற கிரகங்களுடன் சொர்க்கத்துக்குச் செல்லும். அதிக தீமை செய்த உயிரின் குறுந்தகடு இராகு, கேது, சனி போன்ற கோள்களிடம் சென்று நரகத்துக்கு சென்றுவிடும். வினைகளை அனுபவித்து முடித்தபின் எழுவகைப் பிறவிகள் (ஏழு பிறவிகள் அல்லி. நால்வகைத் தோற்றம், 84 லட்சம் யோனி பேதங்கள் என்ற அடிப்படையில் மறுபடியும் ஆணாகவோ, பெண்ணாகவோ, உயர்திணையாகவோ, அஃறிணையாகவோ, தேவராகவோ சுழற்சியாகப் பிறப்பெடுக்கும். உயிரின் தன்மையைப் பொறுத்து உடலிலிருந்து உயிரை எமனோ, எமன் தூதர்களோ கவர்ந்து செல்வார்கள். ஆனால் மறுபிறப்பு என்பதை அந்தத் தூதுவர்கள் செய்யமாட்டார்கள். சைவ சித்தாந்தத்தில் சொல்லப்படும் பஞ்சாக்கினி வித்தை எனப்படும் விண், முகில், தாவரம், ஆண், பெண் என்ற முறையமைப்பு அந்தக் காரியத்தைச் செய்யும். இந்தப் பிறப்பிறப்பு முறை சாதாரண உயிர்களுக்குத்தான் பொருந்தும். அடியார்களுக்கு இது பொருந்தாது.
பல பிறவிகளில் திருநீறு பூசி, திருஉருத்திராக்கம் அணிந்து, ஐந்தெழுத்தோதி, சிவனையே வழிபடும் (மற்றொரு தெய்வத்தைக் கனவிலும் நினையாதி அடியார்களிடம் எமதூதர்கள் வரவேமாட்டார்கள். அவர்கள் உயிரைக் கவரச் சிவகணங்கள்தாம் வருவர். சொர்க்கம், நரகம் இவற்றுக்குப் புறவழிச்சாலை ஒன்று உண்டு. அந்தக் கணங்கள் அந்த அடியாரை நேராக அவர் உலகத்துக்கு அந்த புறவழிச்சாலை வழியாக அழைத்துச் சென்று விடுவர். இவர்கள் நல்வினை, தீவினையென்ற இரண்டையும் கடந்து இருவினை ஒப்பு அடைந்து சத்திநிபாதத்துக்காகக் காத்து நிற்பவர்கள்.

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

தமிழ்

தமிழ்

ஆன்மீக புத்தகங்கள்

Click on any topic to open

Copyright © 2025 | Vedadhara test | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize
Whatsapp Group Icon
Have questions on Sanatana Dharma? Ask here...

We use cookies