11. புராண வரலாறுகள்.
இத்தலத்தின் பெருமைகளைக் குறித்துப் பிரம்மாண்ட மகா புராணத்தில் பலவரலாறுகள் சொல்லப்படுகின்றன. அவைகளுள் சில சுருக்கமாகக் கூறப்படுகிறது.
(1) கதம்ப வன வரலாறு
முன் பிரளய காலத்தில் உலகம் முழுமையும் உருத்திர மூர்த்தியிடம் ஒடுங்கியது. அப்பொழுது நித்தியமாகிய வேதங்கள் தங்களுக்கு இருப்பிடமில்லாதபடியால் சோமேசக கடவுளிடம் சரணாக வந்தனவென்றும் அப்பொழுது அக்கடவுள் கரும பூமியாக்கிய பூலோகத்தில் அவதரிக்கப் போவதாகவும், அங்கு வேதங்கள் கதம்ப மரங்களாகவும், ஆகமங்கள் புஷ்பங்களாகவும், இதிகாசங்கள் பழரூபங்களாகவும், புராணம் முதலியன நானாவர்ணங்களோடு கூடிய பறவைகளாகவும் விளங்கித் தமக்குக் குளிர்ந்த மனோகரமான நிழலைக் கொடுத்துக் கொண்டிருக்குமாறு கட்டளையிட்டனர். வேதாகமம் முதலியன அவ்வாறே வந்து கதம்ப மரங்களாகத் தோன்றினமையின் இதற்குக் கதம்ப வனம் என்ற பெயர் உண்டாகிறது.
(2) பிரமன் வழிபட்டது
திருமாலின் நாபிக் கமலத்தில் தோன்றிய பிரமன் தன் பிதாவின் கட்டளைப்படி, பகவானின் கலயாண குணங்களை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லி வந்ததுடன்பகவானைத் தனது சத்திய லோகத்தில் வைத்துப் பூஜை செய்து வந்தார். இவ்விதம் பூஜித்து வருகையில் பிரமனின் பூஜையைச் சோதிக்க விரும்பிய பகவான் இத்தலத்துக்கு வந்து கதம்பமரம் உருக்கொண்டு இருந்தார். பிரமன் பகவானைக்காணாமல் தேடிக் கொண்டு வரவே, பகவான் கதம்ப மரத்தில் ஐக்கியமாயிருப்பதைக் கண்டு தமது கமண்டல தீர்த்தத்தால் அபிஷேகஞ் செய்ய அத்தீர்த்தம் ஒரு குளமாக நின்றது. அங்கு பிரமதேவர் துவாதசாக்ஷரத்தினால் பகவானை ஆராதித்து சிருஷ்டி சாமர்த்தியத்தைப் பெற்றார்.
பிரம்மாவினால் ஏற்படுத்தப்பட்ட அத்தீர்த்தக் கரையில் கதம்ப முனிவர் இறைவனை அடைய வேண்டி, தம் இந்திரியங்களை அடக்கி கடுந்தவம் புரிந்து வந்தனர். இறைவனும் அவருடைய தவத்திற்கு இரங்கி காட்சியளித்து, முனிவரையும் அவ்விடத்திலேயே இருந்து கொண்டு தம்மை நித்தியபூஜை செய்யும்படி அருளினர். இதற்கிணங்க கதம்ப முனிவரும் புருஷோத்தமர் முன்னிலையில் எழுந்தருளியிருக்கிறார். கதம்ப முனிவர் மேற்கூறிய குளக்கரையில் தவம் செய்தபடியால் அக்குளத்திற்குக் கதம்ப புஷ்கரணி எனப் பெயர் வழங்கலாயிற்று.
(3) பெருமானும் பிரமகபாலமும்
சிவபெருமான் பிரம்ம தேவனுடைய தலையைக் கிள்ளியபொழுது, பிரம்மஹத்தி தோஷத்தால் கையில் அக்கபாலம் ஒட்டிக் கொள்ள அதன் பரிகாரத்தின் பொருட்டு பிரம்ம கபாலத்துடன் தீர்த்தயாத்திரை செய்ய வேண்டித் தேசங்கள் தோறும் சென்றும் அவரது கையிலுள்ள கபாலம் நிறையப் பிக்ஷை கிடைக்காமல் எப்பொழுதும் குறைவாகவே *காணப்பட்டதால் மனக் குறையோடு சுற்றிக் கொண்டு, இக்கதம்ப தீர்த்த க்ஷேத்திரத்திற்கு வந்தபொழுது மிக்க கருணை வாய்ந்த திருமால் திருத்தேவியாரைக் கடாக்ஷித்தருள அவ்வம்மையார் அருளால் அக்கபாலம் நிறையப் பெற்றது. பின்னும் சிவபெருமான், தக்ஷப்ரஜாபதியை யக்ஞதீக்ஷையின் பொழுது கொன்றதனால் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷமும்,இந்த க்ஷேத்திரத்தில் நீங்கப் பெற்று இவ்விடத்திலேயே வீற்றிருக்கின்றனர்.
(4) ஜனகரது யாகம் முடிவுற்றது
முன்னொரு காலத்தில் ஜனக மகாராஜர் தாம் தீர்த்த யாத்திரை செய்வதற்காக அரசபதவியை மந்திரிகளிடம் ஒப்புவித்துவிட்டு இக் கதம்ப தீர்த்தத்தை அடைந்தனர். அவ்விடம் தம் ஆசிரியர் கௌதமர் சொற்படி காசிபர் முதலிய ரிஷிகளை ரித்விக்காகச் செய்து கொண்டு யாகம் செய்யத் துவங்கினர். அந்த யாகத்தில் நாயொன்று புகுந்து அசுத்தம் செய்துவிட்டது. அதையறியாமல் அவர் யாகத்தைப் பூர்த்திச் செய்யத் தொடங்கினர். ரிஷிகளுக்கு மந்திரங்களின் பிரயோகங்கள் ஒன்றுமே தோன்றவில்லை. அங்குள்ள அனைவருக்கும் யாகம் தடைபட்டதைக் குறித்துப் பெரிய கலக்கம் ஏற்பட்டது. ஜனகரும் மனம் கலங்கினார். அனைவரும் பகவானைத் தியானஞ் செய்தனர். அவ்வமயம் ஒரு x முனிவர் தம் சிஷ்யர்களுக்கு வேதாத்தியனஞ் செய்து வைத்துக் கொண்டு ஜனகரைப் பார்த்து, 'ராஜரிஷியே நீவீர் இக்கதம்ப விருக்ஷத்தை உபாஸித்தால் உமது இக்குறை தீரும்.'என்று கூறினார்.அவ்வாறே ஜனகரும் கதம்ப விருவஷத்தைத் துதி செய்ய அம்மரத்திலிருந்து, 'அரசனே, நீங்கள் நாயால் அசுத்தம் செய்யப்பட்ட ஹோம் திரவியங்களைக் கொண்டு ஹோமம் செய்ததால் உங்கள் புத்திக்குக் கலக்கம் உண்டாயிற்று. ஹோம திரவியங்களைப் புதிதாகத் தயாரித்து ஹோமம் செய்தால் புத்திக்குத் தெளிவ ஏற்படும்', என்ற அசரீரி உண்டாயிற்று. அதன்படியே புதிய திரவியங்களைச் சேகரித்து ஹோமம் செய்யத் தொடங்குகையில் நல்ல நினைவு ஏற்பட் அவர்கள் யாகத்தைப் பூர்த்தி
செய்தனர். உடனே ஜனகர் அந்த ரிவி சிரேஷ்டரை வணங்கி தேவரீர் யாவர்? எனக்குத் தெரிவிக்க வேண்டுமென்று வேண்டினர். அது கேட்டு அம்முனிவர் அக்கதம்ப விருக்ஷத்தையே பூஜித்தால் எல்லாம் புலப்படுமெனச் சொல்லி மறைந்தார். அவ்வண்ணமே கதம்ப விருக்ஷத்தைப் பூஜித்துத் துதி செய்ய வேதத்தின் உருவாகிய அவ்விருக்ஷத்தில் விராட் புருஷனாகிய பகவான் தமது புருஷோத்தம வடிவத்தை வெளிப்படுத்தி சேஷபர்யங்கத்தில் சயனம் பூண்டு உந்தித்தாமரை மலரில் நான்முகன் வீற்றிருக்க, பிக்ஷாடன உருவத்தோடு சிவபெருமான் பக்கத்திலிருக்கத் தோன்றிய வண்ணம் காட்சியளித்தார். ஜனகரும் மற்ற மகரிஷிகளும் திரிமூர்த்திகளையும் பூஜித்துத் துதி செய்தனர். ஜனக மகாராஜர் உடனே மும்மூர்த்திகளுக்கும் ஆலயங்கட்டுவித்து விக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்து வைத்தார்.
(5) கருடன் வழிபட்டது
ஆதிசேஷசயனனாகிய பகவான் இங்கு கதம்ப விருஷமாக மாறியிருந்தபொழுது எப்போதும் பகவானுடைய பாதாரவிந்தத்தின் சேவையில் ஈடுபட்டு வந்த கருடன் பகவானைக் காணாது மிகவும் வருந்திப் பல இடங்களிலும் திரிந்து கடைசியாக இவ்விடத்தில் பகவானைத் தரிசித்து வழிபடப் பெருமானும் கருடனைத் தம்முன்னே எப்போதும் தங்கியிருக்கும்படி கட்டளையிட கருடனும் பகவானுடைய அழகிய கோலங்களைப் பார்த்து தோத்திரம் செய்த வண்ணம் தங்கியிருக்கிறார். இதற்கு நிதர்சனமாக இக்கோயில் வைகானச ஆக விதிப்படி அமைந்திருப்பதால் கருடன் எப்போதும் பகவானுக்கு முன்னே தங்கியிருக்கிறார். கருடனுக்குப் பெரிய திருவடி என்ற பெயரும் வழங்குகின்றது. பிரம்மோற்சவத்தில் கருடக் கொடி ஏற்றப்படுகிறது.
(6) சத்கீர்த்திவர்த்தனன் வழிபட்டது
சத்கீர்த்திவர்த்தனன் என்ற அரசன் மகப்பேறில்லாத குறையை நீக்க இவ்விடத்தில் தவம் செய்து, புத்திரனை அடைந்த சந்தோஷத்தினால், ஐந்து கலசங்களுடைய உத்தியோக விமானத்தையும், மண்டபங்களையும், பிராகாரங்களையும் அமைத்து, பூஸ்திதிகளையும் வைத்துச் சித்திரைப் பூர்ணிமையில் இரதோற்சவத்தையும் ஏற்பாடு செய்து நெடுங்காலம் இத்தலத்தில் வசித்து மோக்ஷமடைந்தான்.
இப்பொழுதும் ஸ்ரீரங்கநாதர் மாசி திருப்பள்ளியோடம் 5-ம் திருநாள் அன்று இவ்வாலயத்தில் உபயம் கண்டருளி கதம்ப புஷ்கரணியில் தீர்த்தம் சாதிக்கின்றனர். திருமங்கையாழ்வாரும், இந்த க்ஷேத்திரத்தில் வாசஞ் செய்து கொண்டு ஸ்ரீரங்கநாதருக்கு விமானம், கோபுரம், பிராகாரங்கள் முதலிய திருப்பணிகள் செய்ததாகவும் தெரிகிறது.

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |