முன்னுரை
தஞ்சையை ஆட்சி செய்த மன்னர்களால் சேர்த்து வைக்கப்பட்ட அரிய சுவடிகளைக் கொண்டது தஞ்சை சரசுவதி மகால் நூலகம். இந்நூலகத்தில் தமிழ், வடமொழி, மராத்தி, தெலுங்கு முதலான பலமொழிகளைச் சார்ந்த சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இச்சுவடிகளில் இலக்கியம், இலக்கணம், மருத்துவம், சோதிடம், சிற்பம், இசை, நாட்டியம், வரலாறு முதலான பலதுறைகளைச் சார்ந்த செய்திகள் அமைந்துள்ளன.
சுவடிகளைப் பதிப்பித்த பெரியோர் பலரும் இலக்கியம், இலக்கணம், மருத்துவம், சோதிடம் முதலானவற்றைப் பதிப்பதில் தங்களுடைய ஆர்வத்தைச் செலுத்தினர். அந்நிலையை மாற்றி, இத்தகைய நூல்களோடு, சிற்பம், ஓவியம், இசை, நாட்டியம், கட்டடக்கலை போன்ற ஓலைச்சுவடிகளில் இருக்கும் கலைகள் தொடர்பான நூல்கள் பலவற்றையும் வெளியிட்டுவரும் சீரிய செயலைத் தஞ்சை சரசுவதி மகால் நூலகம் மேற்கொண்டு பல அரிய தமிழ் நூல்கனைச் சுவடிகளிலிருந்து பதிப்பித்தும், பிறமொழியில் அமைந்த கலைகள் தொடர்பான நூல்களைச் சுவடிகளில் இருந்து பதிப்பித்து மொழிபெயர்ப்பு செய்தும் வெளியிட்டு வருகிறது.
தஞ்சை சரசுவதி மகால் நுலகச் சுவடிப் பதிப்புகளாகச் சிற்பம், கட்டடக்கலை தொடர்பான சுவடிப் பதிப்பு நூல்களாகப் பிராமிய சித்ர கர்ம சாஸ்திரம், சாரஸ்வாதீய சித்ரகர்ம சாஸ்திரம், மயமதம், காஸ்யப சில்ப சாத்திரம், சில்ப ரத்தினம், சகளாதிகாரம், ஸ்ரீதத்துவ நிதி, விஸ்வகர்ம வாஸ்து சாஸ்திரம், வாஸ்து வித்யை முதலான பல நூல்கள் வடமொழியில் வெளிவந்துள்ளன. இவற்றுள் ஒரு சில நூல்களில் வீடு கட்டுதல் குறித்த செய்திகள் காணக் கிடைக்கின்றன. 'வாஸ்து வித்யை' மனையைக் கட்டுவது குறித்த செய்திகளைக் கூறும் நூலாக அமைந்துள்ளது. தமிழில், மனையைக் கட்டுவது தொடர்பான செய்திகளைக் கூறும் பதினாறு சுவடிகள் இந்நூலகத்தில் காணப் படுகின்றன. அவை இதுநாள் வரை எந்தக் காரணத்தினாலோ பதிப்பிக்கப்படாமலேயே இருந்துள்ளன.
தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் காணப்படும் மனையைக் கட்டுவது தொடர்பான சுவடிகள், மனையடி சாத்திரம் (3சுவடிகள்), மனைசாத்திரம் (2 சுவடிகள்), மயனூல் (3சுவடிகள்), சில்ப சாத்திரம் (3சுவடிகள்), மனையலங்காரம் (ஒரு சுவடி), சில்பசாரசுருக்க சிந்தாமணி (ஒரு சுவடி), சிற்ப சாத்திரம் (2 சுவடிகள்) ஆகியவையாகும். நட்சத்திர நிகண்டு (சுவடி எண் 888) என்ற சுவடியில் மனையடியைக் குறித்த செய்திகள் சில காணப்படுகின்றன. இச்சுவடிகளில் மனை சாத்திரம், மனையடி சாத்திரம், மயனூல் என்று கேட்ட அளவில் அது ஒரே நூல் என்றும், அந்நூல் பதிப்பிக்கப்பட்டுவிட்டது என்று கருதும் போக்கு பலரிடையே காணப்படுகிறது. 'கணக்கதிகாரம்' என்பது எப்படி கணித நூல்களுக்கு உள்ள பொதுப்பெயரோ அதைப் போலவே மனையடி 'சாத்திரம்' என்பது பொதுப் பெயராக அமைந்துள்ளது. வீடு கட்டுவதற்கான செய்திகளைத் திரட்டிக் கூறும் நூலுக்கு மனையடி சாத்திரம் என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது என்பதை பல்வேறு சுவடிகளையும் காணும் பொழுது அறிந்து கொள்ள முடிகிறது. இவற்றையன்றிச் சில்ப சாத்திரம், சிற்ப சாத்திரம், சிற்பசார சுருக்க சிந்தாமணி ஆகிய பெயர்களையுடைய சுவடிகளில் மனையைக் கட்டுவது தொடர்பான செய்திகளைக் கொண்டிருப்பினும், நூல்களின் பெயர்களைக் கேட்ட அளவில் 'சிற்பங்களைக் குறித்த நூல்' என்ற கருத்தினைத் தோற்றுவிப்பனவாக அமைந்துள்ளதால், அவற்றை சிற்ப நூல்கள் என எண்ண வாய்ப்பிருந்துள்ளது.

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2023 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |