பீமன் எவ்வாறு பத்தாயிரம் யானைகளின் பலத்தினை வளர்த்தான்?

Listen to this article

பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டு புகழ் பெற்றவர் பீமன் ஆவார். அவருக்கு அந்த பலம் எவ்வாறு கிட்டியது என்பதைப் பார்ப்போம்.

துரியோதனன் பீமனுக்கு விஷம் கொடுத்தது

சிறு பிள்ளைகளாக இருந்த போது கௌரவர்களும் பாண்டவர்களும் கங்கைக் கரைக்குச் சென்றிருந்தனர்.
மிகவும் ரம்மியமான தோட்டத்தில் அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு அரண்மனையிலிருந்து கொண்டுவந்த சுவை மிகுந்த பண்டங்களை ஒருவருக்கு ஒருவர் வாயில் ஊட்டிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது துரியோதனன் பீமனுக்குக் கொடிய காலகூட விஷத்தினை கலந்த தின்பண்டத்தைக் கொடுத்தான்.

அப்பொழுது என்னவாயிற்று?

அதன் பிறகு அனைவரும் தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
மாலைப் பொழுது ஆகியதும் அனைவரும் சோர்ந்து விட்டனர்.
அனைவரும் அன்றைய இரவை அங்குக் கழிக்கத் தீர்மானித்து விட்டனர்.
அவர்கள் அனைவரும் உறங்குவதற்குப் படுத்தபிறகு, துரியோதனன் பீமன் விஷம் காரணமாக மயக்க நிலையில் இருப்பதை அறிந்தான்.
அவன் பீமனைச் சரகுகளால் கட்டி கங்கை நதியில் எறிந்தான்.

பீமன் எவ்வாறு பத்தாயிரம் யானைகளின் பலத்தினை வளர்த்தான்?

சுயநினைவற்ற நிலையில் பீமன் கங்கையில் மூழ்கிய பிறகு நாக லோகத்தை அடைந்தான்.
அங்குள்ள பல்வேறு நாகங்களும் அவனை எதிரி என நினைத்துக் கொட்டின.
அந்த நாகங்களின் விஷமானது துரியோதனன் அளித்த விஷத்திற்கு மாற்று மருந்தாக இருந்தது.
கண் விழித்த பீமன் தன் கட்டுகளை அவிழ்த்து அங்குள்ள நாகங்களை கைகளில் பிடித்து தரையில் அடித்தான்.

நாகங்களின் அரசனான வாசுகி, இதை அறிந்து கீழே இறங்கி வந்தான். அங்குள்ள ஒரு வயது முதிர்ந்த ஆர்யகன் எனும் நாகம் பீமனை தன் பேரனின் பேரன் என்பதை அறிந்து கொண்டது.

குந்தியின் தந்தை ஆர்யகனின் மகளின் மகன் சூரசேனன் ஆவார்.

வாசுகி பீமனுக்கு நிறைய பொன்னையும் ரத்தினங்களையும் அளித்தது. ஆர்யகன் அங்குள்ள குண்டத்திலிருந்த பானத்தை பீமன் அருந்துவதற்கு அனுமதி அளித்தது. ஒவ்வொரு குண்டத்தில் உள்ள பானமும் ஆயிரம் யானைகளின் பலத்தினை அதைக் குடிப்பவருக்குத் தரவல்லது.

பீமன் அங்குள்ள அனைத்து குண்டத்தில் உள்ள பானத்தினை குடித்து அவை ஜீரணிப்பதற்கு அங்கேயே ஏழு நாட்கள் உறங்கிவிட்டான். எட்டாவது நாள் உறக்கத்திலிருந்து எழுந்தான்.

அங்குள்ள நாகங்கள் பீமனிடம் அவன் பத்தாயிரம் யானைகளின் பலத்தினை பெற்று விட்டதாகவும் அவனை யாராலும் வெல்ல முடியாது என்றும் கூறினர்.

அந்த நாகங்கள் அவனைக் கொண்டு வந்து அதே தோட்டத்தில் விட்டுச் சென்றனர். அரண்மனைக்குத் திரும்பிய பீமன் அங்குள்ள அனைவரிடமும் நடந்தவற்றைக் கூறினான்.

மீண்டும் ஒரு முறை துரியோதனன் பீமனுக்கு காலகூட விஷத்தை உணவுடன் சேர்த்து அளித்தான்.
இம்முறை திருதராட்டிரன் மகன் யுயுத்ஸு அவனை எச்சரிக்கை செய்தான். ஆனாலும் பீமன் விஷம் கலந்த உணவை அருந்தினான். அது ஜீரணிக்கவும் செய்தது. அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை.

Author

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Audios

1

1

Copyright © 2021 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Active Visitors:
2438714