தீராத விளையாட்டுப் பிள்ளை

தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை
தின்னப் பழங்கொண்டு தருவான்
பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என்னப்பன் என்னையன் என்றால் அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்(தீராத)
தேனொத்த பண்டங்கள் கொண்டு என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்
மானொத்த பெண்ணடி என்பான் சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்(தீராத)
அழகுள்ள மலர்கொண்டு வந்தே என்னை
அழஅழச் செய்துபின் கண்ணை மூடிக்கொள்
குழலிலே சூட்டுவேன் என்பான் என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்(தீராத)
பின்னலைப் பின்னின் றிழப்பான் தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்
வன்னப் புதுச்சேலை தனிலே புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்(தீராத)
புல்லாங் குழல்கொண்டு வருவான் அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்
கள்ளர்ல் மயங்குவது போலே அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்(தீராத)
அங்காந் திருக்கும்வாய் தனிலே கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்
எங்காகிலும் பார்த்த துண்டோ கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ(தீராத)
விளையாட வாவென் றழைப்பான் வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்
இளையாரொ டாடிக் குதிப்பான் எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான்(தீராத)
அம்மைக்கு நல்லவன் கண்டீர்‌ மூளி
அத்தைக்கு நல்லவன் தந்தைக்கு மஃதே
எம்மைத் துயர்செய்யும் பெரியோர்வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான்(தீராத)
கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன் பொய்மை
சூத்திரம் பழிசொலக் கூசாக் சழக்கன்
ஆளுக் கிசைந்தபடி பேசித் தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான்(தீராத)

 

Theeradha Vilayattu Pillai

 

Copyright © 2023 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |