சேலம் மாவட்டத்தில் உள்ள கோயில்களின் புராணம், வரலாறு, பெருமைகள், திருவிழாக்கள், நேரங்கள் போன்றவற்றைப் பற்றிய புத்தகம் இது.
தலைப்புகள் - அருள்மிகு சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில், இராஜகணபதி திருக்கோயில், காசிவிஸ்வநாதர் சுவாமி திருக்கோயில்,
கோட்டை மாரியம்மன் திருக்கோயில், கோட்டை, தான்தோன்றீஸ்வரர் மற்றும் ஸ்ரீ அஷ்டபுஜ பாலமதன வேணுகோபாலசுவாமி திருக்கோயில், பேளூர், வாழப்பாடி சாம்பமூர்த்தீஸ்வரர் மற்றும் கோபாலசுவாமி திருக்கோயில், ஏத்தாப்பூர் காயநிர்மலேஸ்வரர், பிரசன்ன வெங்கடேச பெருமாள், கைலாசநாதர் திருக்கோயில்கள், காமநாதீஸ்வரர் திருக்கோயில், ஆறகழூர், ஆத்தூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், மேட்டூர் அணை
கைலாசநாதர் திருக்கோயில், தாரமங்கலம், ஓமலூர் அழகிரிநாதசுவாமி திருக்கோயில், மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் (வ) திருக்கோயில்கள், மாரியம்மன், திரௌபதியம்மன் திருக்கோயில்.
இறைவன் : அருள்மிகு சுகவனேசுவரர் சுவாமி இறைவி : அருள்மிகு ஸ்வர்ணாம்பிகையம்மன் தீர்த்தம் : அமண்டூக தீர்த்தம் தல விருட்சம் : பாதிரி ஆகமம் : காரண ஆகமம் இசைக்கருவி : தவண்டை, ஜேகண்டை
புராணச்சிறப்பு
நான்கு யுகங்களிலும் பிரசித்தி பெற்றது. கிருதயுகத்தில் நான்கு மறைகள் அரசமர வடிவில் பூஜித்து, தேவர்களின் பாபங்களைப் போக்கியதால் 'பாபநாசம்' என்றும்; துவாபரயுகத்தில் ஆதிசேஷன் வழிபட்டதால் 'நாகீச்சுரம்' என்றும்; திரேதாயுகத்தில் காமதேனு பசு வழிபட்டதால் 'பட்டீசுரம்' என்றும் கலியுகத்தில் கிளி உருவம் கொண்ட சுகபிரம்ம மகரிஷி வழிபட்டதால் 'சுகவனம்' என்றும் ; சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டதால் 'மும்முடித் தலைவாயில்' என்றும் சிறப்பு பெயர்கள் பெற்றது. தலச்சிறப்பு
672 பாடல்களைக் கொண்ட 'பாபநாசத் தலபுராணம்' சுகவனேசுவரர் திருத்தலத்தின் சிறப்புக்களைக் கூறுவதாகும்.
சுகவனேசுவரர், கரபுரநாதர், வீரட்டேசுரர், பீமேசுவரர் மற்றும் திருவேலிநாதர் எனும் ஐந்து அட்சரங்கள் பெற்ற திருமணிமுத்தாறு நதிக்கரையில் சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருப்பதால் 'பஞ்சாட்சர நாதம்' எனும் சிறப்பைப் பெற்றுள்ளது. ஒரே நாளில் இந்த ஐந்து தலங்களையும் வழிபடும் மரபு உள்ளது. அவற்றில் சுகவனேசுவரரே மையமாகக் கருதப்படுகிறார். கிளிகள் கூட்டமாக! -பிரம்ம தேவன் ஒரு முறை படைப்பின் ரகசியத்தை சுகமுனிவரிடம் கூற , அவர் அதனை ச ர ஸ் வ தி யிடம் எடுத்துரைத்தார். சினங்கொண்ட நான்முகன் சுகமுனிவரைக் கிளியாக பிறந்திட சாபம் கொடுத்தார். வருந்திய சுக முனிவர் பூவுலகம் வந்து, கிளிகள் கூட்டமாக வாழ்ந்திருந்த சுகவனத்தை அடைந்தார். அங்கே, புற்றின் அடியில் வெளிப்பட்ட சிவலிங்கத் திருமேனியை, நெல் மணிகளால் பிற கிளிகளோடு பூசித்து வந்தார். அப்போது வேடன் ஒருவன், கிளிகளைத் தாக்கிட, கிளிகள் யாவும் அங்கிருந்த ஒரு புற்றில் ஒளிந்து கொண்டன. வேடன் மிகுந்த கோபம் கொண்டு புற்றை மண்வெட்டியால் வெட்டினான். அப்போது புற்றுக்குள்ளிருந்த சிவலிங்கத் திருமேனியை காத்திட கிளி வடிவில் இருந்த சுகமுனிவர், தன் இறக்கைகளால் இறைவனை மறைத்து காத்திட முயற்சிக்கையில் வேடனால் வெட்டப்பட்டார். அப்போது சிவலிங்கத்திலிருந்து குருதி கொப்பளிக்க, அதனைக் கண்ட வேடன் மயக்கமுற்றான். அப்போது ஈசன், அங்கே தோன்றி, சுகமுனிவரின் சாபத்தையும் விலக்கியதோடு, வேடனுக்கும் திருவருள் செய்தார். அதுமுதல், இங்கே எழுந்தருளியுள்ள ஈசன், 'சுகவன ஈசுவரர்' எனும் சிறப்புப் பெயர் கொண்டார்.
மேலும் கிளிவனமுடையார், சுகவனேசுவரர், கிளிவனநாதர் என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார் பெருமான்.
மூலவரின் திருமேனியில், வேடனால் வெட்டுண்ட காயம் உள்ளதை திருமஞ்சனத்தின் போது தரிசனம் செய்யலாம்.
தேவர்கள் அரசமர வடிவில் வழிபட்டதும், ஆதிசேஷனுக்கும், சேரமான் பெருமானுக்கும் எம்பெருமான் தாண்டவ தரிசனம் அளித்ததும், தமிழ் மூதாட்டி அவ்வையார், வளர்ப்பு மகளான ’பிறவி’யின் திருமணத்தை, மூவேந்தர்கள் முன்னே ஓர் அற்புதத்தை நிகழச் செய்தபின் நடத்தி வைத்ததும், பாபநாசத்தல புராணத்தில் இடம் பெற்றுள்ளன.
3 நிலை இராஜகோபுரம், ஒரு பிரகாரத்துடன் அமைந்த திருக்கோயில் வெளிச்சுற்றில் அறுபத்து மூவர், சப்தமாதர், நால்வர், இரட்டை விநாயகர், ஆலமரச்செல்வர் சந்நிதிகள் உள்ளன. பஞ்சபூதலிங்கங்கள், கங்காளர், காசிவிசுவநாதர், ஜேஷ்டாதேவி ஆகிய சுற்றுபிரகார சந்நிதிகள், அறுபடை வீடு சிற்பங்கள் கொண்ட முருகப்பெருமான் சந்நிதி, பிரம்மா, சண்டிகேசுவரர், துர்க்கை சந்நிதிகளும் உள்ளன.
'சுகவனேசுவரர்'
நான்கு யுகங்களாக திருத்தலத்திற்கு பெருமை சேர்க்கும் சுயம்புலிங்கமாக சுகவனேசுவரர் எழுந்தருளியுள்ளார். நீண்டு உயர்ந்த பாணம் மூலவர் திருமேனி ஒரு பக்கம் சாயந்திருப்பதோடு, வெண்மையான வெட்டுத்தழும்பும் காணப்படுகிறது. கிளிமுகம் கொண்ட சுகமுனிவரும் சிலைவடிவில்(தனிச்சந்நிதி) காட்சிதருகிறார்.
Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi