செய்ய வேண்டுவன
தமிழக வரலாற்றைச் செழுமைப்படுத்திய திருக் கோயில் தத்துவத்தைக் கண்டோம்! திருக்கோயில் சமுதாயத் தின் ஆற்றல் மிக்க மையமாக விளங்கியது. “கோயிலைத் தழுவிய குடிகளும் குடிகளைத் தழுவிய கோயிலும்” எனப் பழந்தமிழ்ச் சமுதாய அமைப்பு விளங்கியதை அறிய முடிகிறது. இன்று நமது திருக்கோயில்களுக்கும் நமது சமுதாயத்திற்கும் நெருக்கமான உறவில்லை. திருக்கோயில் வணிகக் கூடமாக உருமாற்றம் பெறுவதைத் தவிர்க்க வேண்டும். திருக்கோயில், சமுதாயத்தின் நல்லமைப்புக்கு எதிராக இருக்கிற தீமைகளிலிருந்து மக்களை விடுதலை செய்ய வேண்டும். அதாவது சாதி வேற்றுமை, தொழில் வேற்றுமை, தீண்டாமை பாராட்டுதல் முதலிய தீமைகளி லிருந்து மீட்கவேண்டும். திருக்கோயில் ஒரு சுரண்டும் நிறுவனமாக வளர்வது, திருக்கோயில் தத்துவத்திற்கே முரணானது! அதனால், நாடு கெடும். பொதுமை நெறிக்கு மாறான ஒரு மேலாதிக்கக்குடி திருக்கோயிலைச் சார்ந்து தோன்ற அனுமதிக்கக் கூடாது.
திருக்கோயிலைச் சார்ந்தவர்கள் அனைவரும் தொண்டர்கள், திருக்கோயிலைச் சார்ந்து, மீண்டும் திருநெறிய தொண்டு உயிர்ப்புப் பெறுதல் வேண்டும். திருக் கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்ட ஊராட்சி மன்றங்கள், கல்விச்சாலைகள், மருத்துவச் சாலைகள் மீண்டும் திருக்கோயில் வளாகத்துக்குள் வந்தாக வேண்டும். நாம் ஒவ்வொருவரும் திருக்கோயிலுக்குக் கடமைப் பட்டிருக் கிறோம். நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள்!
திருக்கோயிலின் அசையும் சொத்து, அசையாச் சொத்துக்களின் பட்டியல் மட்டும் இருந்து பயன் என்ன? திருக்கோயிலில் நம்மவர் பதிவேடு இருக்க வேண்டும்.
நம்மவர் வாழ்க்கை நிகழ்வுகளைத் திருக்கோயிலிலேயே செய்ய வேண்டும். நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் திருக்கோயில் தத்துவம் மேலாண்மை பெற்று விளங்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் திருக்கோயிலுக்குரிய கடமைகளை-அவை எத்தகையவாக இருந்தாலும் தவறாது செய்தல் வேண்டும். ஆண்டுதோறும் ஈட்டிய செல்வத்தில் ஒரு பகுதியினைத் திருக்கோயிலுக்கு உளமார மனமுவந்து செலுத்த வேண்டும். இங்ஙனம் செலுத்துவதன் மூலம் திருக்கோயில் நிதிநிலை சீராகும். இது நடைமுறைக்கு வந்தவுடன் அருச்சனைச் சீட்டு முறைகளை (வணிக முறைகளை) அறவே நீக்க வேண்டும். திருக்கோயில் நிதி சீராகச் செலவழிக்கப் பெறவேண்டும். சிக்கனமாகச் செலவழிக்கப் பெறவேண்டும். திருத்தொண்டின் மூலமே, ஊதியம் பெறாத உழைப்பின் மூலமே, திருக்கோயில்கள் தூய்மையுடன் பேணப்படவேண்டும்.
திருக்கோயிலில் ஆரவாரமான செலவுகளைத் தவிர்க்க வேண்டும். திருக்கோயிலில் பொது நிதி ஆதாரத்தை வலிமைப்படுத்தி, வளமாக வாழ வாய்ப்பில்லாதவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கி உதவி செய்து அவர்களை உயர்த்த வேண்டும். மீண்டும் திருக்கோயிலை மையமாகக் கொண்ட சமுதாயத்தை அமைப்பது நமக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது!
திருக்கோயில்கள் சமுதாயத்தின் மையங்களாகவும் சமுதாயத்தின் உடைமைகளாகவும் இருக்க வேண்டும். திருக்கோயில்கள் தனியார் உடைமைகளாகவும் மதச்சார் பற்ற அரசாங்கத்தின் உடைமைகளாகவும் இருப்பது விரும்பத்தக்கதல்ல! திருக்கோயில்களை மீண்டும் சமுதாய மையமாக மாற்றுவோம்!

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |